Thursday, September 3, 2009

வல்லரசு இந்தியா 2020

இளைய பாரதமே எழுந்து வா !!!

சுதந்திரத்திற்கு முன்பு நிகழ்ந்த,
சுயநலமில்லாத தியாகிகளின்,
சூடேற்றும் போராட்டங்களையும்,
ரத்தம் சிந்திய தியாத்தையும்,
நினைத்துப் பார்ப்பதை விட்டு,

அளவிட முடியாத அவர்களின்
அர்ப்பணிப்பு, எத்துனை அளவிற்கு
பயன் கொடுத்துள்ளது என்பதை
எண்ணிப்பார்த்தால் கேள்விக்குறி தான்
நம் முன்னே நிற்கிறது !!!


விடுதலை தியாகிகளின்,
வீரமான தியாகத்தை,
வியந்து பாராட்டுவது மட்டும்,
உண்மையான அஞ்சலி ஆகாது !


உயிர் கொடுத்த தெய்வங்களின்,
உணர்வு மிக்க சிந்தனைகளை,
உறுதியோடு நாம் செயல்படுத்தினால் மட்டுமே,
அவர்களின் கனவு நனவாகும் !
ஆத்மா சாந்தியடையும் !!

உண்மையான சுதந்திர பலனை அடைய,
உயிர்த்தியாகிகளின் கனவை நனவாக்க,
இளைய பாரதமே எழுந்து வா !!!
இளைய பாரதமே எழுந்து வா !!!


இளைஞர்களே!
இசைந்து வாருங்கள் !
இன்பமுடன் புதிய பாரதத்தை இயற்றிடுவோம் !
மன்னர்களே !
மத பிரிவினையை தொலைத்து விட்டு வாருங்கள் !
மாபெரும் வல்லரசை உருவாக்கிடுவோம் !

இயலாது என இருப்பது
கோழைகளின் செயல் !
முடியாது என்ற முடிவு
முடமானவர்களின் செயல் !

மாணவனே முயன்று பார் !
இளைஞனே திரண்டு பார் !
உன் ஒற்றுமையை நாட்டில் உணர்த்திப் பார்!

அறிவு தரும் ஆசிரியரிடம்
அகம்பாவம் எதற்கு?
கல்வி தரும் கல்லுரியிலே
கலாட்டா எதற்கு?

அறிவு ஒளி பெற்று திகழஒன்றாக வேண்டும் - ஆனால்
ஒன்றும் இல்லாத ஒரு செயலுக்கு
ஒன்றுபடுவது எதற்கு?

நம் பிரச்சினை என
நம்மோடு இருப்பதனால் தான்
நாட்டை கூறு போடும்
நய வஞ்சகர்களுக்கு சாதகமாகிறது!

பாவி மக்களைப் பாடாய்ப்படுத்தும்
அரசியல்வாதிகளை திருத்துவதா?

அநியாயம் செய்யும்
அதிகாரிகளை திருத்துவதா?

ஊழல் செய்வதில்
ஊக்கமுள்ளவர்களை திருத்துவதா?

ஏழைகளை
வறுமையில் வாட வைக்கும்
வஞ்சகர்களை திருத்துவதா?

உளவு செய்யும்
உளவு பெருச்சாளிகளை திருத்துவதா?

படிப்பை வியாபாரமாக்கும்
பரதேசிகளை திருத்துவதா?

யாரை திருத்துவது?
சிந்தயுங்கள்.

மகாத்மா காந்தி பெற்று தந்த
சுதந்திரம் எதற்கு?
காசு பணம் கருப்பு பணம் ஆகவா?

மகாகவி பாரதி பெற்று தந்த
சுதந்திரம் எதற்கு?
பாழாய் போன பாரதம் ஆகவா?

அருமை மாமா நேரு பெற்று தந்த
சுதந்திரம் எதற்கு?
நெறிகெட்டவர்களின் விதிமுறைக்கு கட்டுப்படவா?

இளைய பாரதமே என
அழைத்தாரே விவேகானந்தர்!

அழைத்து அழைத்து அவர்அடங்கிவிட்டார்!
இன்றும் நாம் செல்லவில்லை!
இன்னும் இருந்துவிட்டால்???

இருப்பதற்கு பாரதம் இருக்காது!

கலவரம் மிகுந்த காடாகிவிடும்!
சுயநலம் மிகுந்த சுடுகாடாகிவிடும்!
நரிகள் வாழும் நாடாகிவிடும்!

திறந்த வீட்டினில் கேட்பாரற்று
நாய்கள் நுழைந்து தின்பதனைப்போல,
சிறந்த நாட்டினில் கேட்பாரற்று - இந்த
நாய்கள் நுழைந்து தின்கின்றன!

இது நாய்களின் தப்பல்ல!

வீடைப் பூட்டாதது யார் குற்றம்? -அது போல
நாட்டை சிந்திக்காதது யார் குற்றம்?

வேலியே பயிரை மேய்வதைப் போல
வெறி கொண்ட பேய்கள் நாட்டை மேய்கின்றன!

இந்த மிருகங்களை வேட்டையாடுவது யார்?
இந்த சுரண்டித்திண்கும் திமிங்கலங்களின் வாயில்
சூடு போடுவது யார்?

பெரியோர்களால் முடியாது.
அவர்கள் முயலாதவர்.

சிறுவர்களால் முடியாது.
அவர்கள் அறியாதவர்.

வலிமைமிகு இளைய பாரதமே...
உன்னால் முடியும்!
உன்னால் மட்டும் தான்முடியும்!

தாய் நாட்டிற்க்கு இணை
தரணியில் இல்லை எனும் நிலை உருவாக்கிட...

பாரதம் பெற்றெடுத்த இளஞ்சிங்கங்களே!

சிறையுண்டுள்ள சிற்றின்ப
சிந்தனைகளை சிதைத்து எறியுங்கள்!

சார்ந்துள்ள சாதி மதத்தை
சாகடித்து வாருங்கள்!

கல்வியை கெடுக்கும் காம
கடிவாளத்தை கழட்டி வாருங்கள்!

வல்லவர்கள் வாழும் வலிமைத்திருநாடு
வல்லரசாவது நிச்சயம்!


கரை படியாத கைகள்,
களங்கப்படாத உள்ளம், - நடப்பு
காலத்தை பின் தள்ளும் சிந்தனை,
கன்னியின் கணவனாக மறுத்து,
பாரதத்தின் கனவு காணும்
மாபெரும் மனிதர் - திரு கலாம் என்னும்
பெயரோடு, நம் கண் முன்னே!!!

எத்தனையோ அறிவு சார்ந்தவர்
உடன் இருப்பினும்,
நங்கூரமாக நம் மேல்
நம்பிக்கை வைக்கின்ற
நல்லவரை,
நாளைய சமூகம் நகைப்புடன் பார்க்க வேண்டுமா?
வியப்புடன் பார்க்க வேண்டுமா?

வியப்புடன் பார்க்க வேண்டுமாயின்
நாம் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?

ஜாதி, மதம்,இனம்,மூடப்பழக்கவழக்கங்கள்,கீழ்த்தரமான அரசியல், அதிகார ஆதிக்கம், லஞ்சம்,ஊழல்,கலவரம்,பயங்கரவாதம்,தீவிரவாதம் போன்றவை அடங்கிய இச்சமூகம் இப்படியே இருக்கட்டும்.

இவைகளில் இருந்து
தனித்து நிற்ப்போம்!
தனித்து செயல்படுவோம்!

விவசாயம்,விஞ்ஞானம்,அறிவியல்,தொழில்நுட்பம்,வணிகம்,வர்த்தகம்,மருத்துவம்,பொருளாதாரம்,விளையாட்டு,ஆன்மீகம் போன்ற துறைகளில் கால்பதித்து,ஒரு அமைதியான பாரத புரட்சியை ஏற்படுத்திட,
கொள்கைகளில் வேறுபட்டிருப்பினும் வலிமையான பாரதம் காணும் நோக்கில் தற்கால விவேகானந்தர் ஆகிய முன்னாள் குடியரசுத் தலைவர் ABJ. அப்துல் கலாம் அவர்கள் அழைக்கும் வல்லரசு இந்தியா 2020 ஐ நோக்கி நாமும் பயணமாவோம்.!!!

தேச பணியில்,
பிரகலாத்.

Tuesday, September 1, 2009

இளைய பாரதம் - முகப்பு

"நூறு இளைஞர்களை எனக்கு கொடுங்கள், வலிமையான பாரதத்தை உருவாக்கி காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர்."


அவ்வேளையில் நாம் அவர் அழைப்புக்கு செவி சாய்க்கவில்லை,இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் அவர் அழைப்பு வெறும் அழைப்பாகவே நம் செவிகளில் ஒலிக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் அது அழைப்பாகவே இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.


இந்த வலைப்பதிவின் நோக்கம் விவேகானந்தர் விரும்பிய இளைஞர்களை உருவாக்குவது அல்ல!. அவர் விரும்பிய இளைஞர் யார்? அவர்கள் எத்தகையவர்? என்பதை அடையாளம் கண்டுகொள்வதே! ஏன் எனில் அவர் விரும்பிய இளைஞர் யார் என்பதை இன்றளவும் அறிய விருப்பம் இல்லதவர்களாக அந்நிய ஆதிக்கத்தில் மோகம் கொண்டு, அவரின் ஒரு சில கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அதன் மெய்பொருள் உணராமல் அறிந்து கொண்டு, அதை அந்நிய கலாச்சாரத்தின் இன்றைய நிலையில் ஒப்பிட்டு, "அவர் வழி செல்கிறோம்" என்ற நிலையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.


"ஒவ்வொரு நாடும் ஒரு தனித்தன்மையை கொண்டுள்ளது". அதன் தனித்தன்மையை அடைந்தவுடன் அல்லது இழந்தவுடன் அந்த நாடு சிதைந்துவிடுகிறது. பாரதத்தின் தனித்தன்மை ஆன்மீகம் தான்! ஆன்மிகம் மட்டும் தான்!! பாரதம், உலகிற்கு உணர்த்த விரும்பும் கோட்பாடு, "ஆன்மீக கோட்பாடுகள் தான்" என்பதை ஆணித்தரமாக உறுதி உடன் உலகிற்கு எடுத்து கூறியவர் சுவாமி விவேகானந்தர்.

இருப்பினும் இம் மண்ணில் வாழும் நாம், உண்மையான ஆன்மிகம் என்றால் என்ன? என்பதை அறியாதவர்களாகவே வாழ்கிறோம். உண்மையான ஆன்மீகம் எங்கு இருக்கிறது? எது ஆன்மீகம்? விவேகானந்தர் அழைத்த இளைஞர்கள் யார்? என்பதை அலசி ஆராயும் நோக்கில் உருவாக்கப்பட்டது இந்த வலைப்பதிவு. இதில் தாங்களும் தங்கள் கருத்தை பதிவு செய்து, இந்த ஆராய்வில் கலந்து, தாங்கள் அறிந்த கருத்துகளை மற்றவர் அறிய செய்ய வேண்டுகிறேன்.

தேசபணியில்,
பிரகலாத்.

என்னை பற்றி...

எவராலும், என்றும் அழிக்கமுடியாத நம் நாட்டு பெருமைகளை,அயல் நாட்டு கலாச்சாரத்தின் ஆதிக்கத்தால் என்னால் கடைபிடிக்க முடியவில்லை என்றாலும், அதை அறிந்து கொள்வதில் பேரார்வம் கொண்டேன்.


இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக்காரர்களாகிய நம் முன்னோர்களின் வழி வந்த நான் திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்டு, சென்னையில் SRM கல்லூரியில் எனது MBA பட்ட படிப்பை முடித்து தற்போது ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணி செய்து வருகிறேன்.


தாய் மொழி மீதும், தாய் நாட்டின் மீதும் கொண்டுள்ள மோகத்தால் இந்த வலைப்பதிவை உருவாக்கி எனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன். என்னை விட நாட்டுப்பற்றில் உயர்ந்தவர்களாகிய நீங்கள் உங்கள் அனுபவத்தையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

தேச பணியில்,

பிரகலாத்.

check it my short film....


http://www.orkut.com/FavoriteVideos.aspx?uid=5312077022605573816